Meenachi Essay

கட்டுரைத் தலைப்பு: மொழிக் கல்விக்கு உதவும் பண்பாடு

ஆசிரியர்: முனைவர் ச மீனாட்சி  (Meenatchi d/o Shanmugam)

 

முன்னுரை:

சில ஆண்டுகட்கு முன்னர் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் படைக்கப்பட்ட ‘மொழி வளரப் பண்பாடு அறிதல்’ எனும் எனது ஆராய்ச்சிக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலும் பல்லின சமுதாயம் கொண்ட பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மாணவர்கள், தமிழ் மொழியைப் பயில்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அக்காலம் போலன்றி இக்கால இளைய தலைமுறை, தாய்மொழிப் பயன்பாட்டிலும் பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. இது காலத்தின் கட்டாயம் என்பது உண்மையே.

இட்டலியும் தோசையும் தினமும் சாப்பிட வாய்ப்பில்லாத சிறுவர்கள் இன்று பர்கர், பிஸா போன்ற உணவுகளை உண்டு வளர்கின்றனர். வாழையிலையில் சாப்பிடுவது அரிதாகிவிட்டது. பொட்டு வைப்பதும் திருநீறு பூசுவதும் கோவிலுக்குச் செல்லும்போது மட்டுமே செய்யக்கூடியதென்ற சூழல் நிலவுகிறது. தமிழ்த் திரைப்படம் பார்க்காமல், ஆங்கிலச் சித்திரங்கள் மட்டும் கண்டு வளரும் பிள்ளைகள் பலர் இருக்கின்றனர். அண்மைக் காலத்தில் கொரிய ‘pop’ கலைஞர்களால் கவரப்பட்டு, கொரியப் பாடல்கள் கேட்டு அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் பலர்.

இந்த நிலையில், பள்ளியில் ஒரு பாடமாகத் தாய்மொழிக் கல்வி பயில வரும் மாணாக்கர், தமிழ் எனும் மொழி, தங்கள் வாழ்வில் எத்தகைய பயன் தரக்கூடும் என்பதை அறிய வழி என்ன? மொழியின் சிறப்பை அறிய அவர்களுக்கு வாய்ப்பளிப்பது பண்பாட்டு அறிவு மட்டுமே. வேர் அறிய விரும்பாத மனிதர் யார்?

தம்மினத்துக்குரிய கலைகள், இலக்கியங்கள், இலக்கிய மாந்தர் போன்றோரை அறிந்துகொள்ளும்போதுதான் தம்மொழியின் வரலாறு, அதன் சிறப்பு போன்றவற்றால்  உந்துதல் பெற்று அதன் மூலம் தொடர்ந்து மொழித் திறனை வளர்த்துக்கொள்ளும் ஆர்வத்தைக் கொள்வர் மாணவர்கள். எனவே, மொழித் திறன் மேம்பாட்டில் பண்பாட்டுக்கூறுகள் முக்கிய இடம் பெறுகின்றன.

இலக்கிய ஆய்வு:

சிங்கப்பூரின் தமிழ்மொழிக் கல்வித் திட்டம் மேற்கூறப்பட்ட கருத்தினை முழுமையாக ஆமோதிக்கும் வண்ணம், தன் பாடக் கலைத்திட்டத்தில் தமிழ் இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மிகுதியும் சேர்த்துள்ளது.

எடுத்துக்காட்டுக்கு, உயர்நிலைப் பள்ளிப் பாத்திட்ட ‘தமிழ்ச் சுடர்’ நூல் வரிசையில் உயர்நிலை 4 பாடநூலில், திரைகடல் ஓடியும் திரவியம் சேர்த்த தமிழர்கள் பற்றிய பனுவல் இடம்பெற்றுள்ளது. கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரை அக்காலத் தமிழர் வணிகம் செய்த முறை விளக்கப்படுகிறது. கடல் வணிகத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த தமிழரின் வணிகக் கோட்பாட்டை உணர்த்தும் பட்டினப் பாலை பாடல் வரிகளும் சுருக்கமாக உள்ளன.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய ‘தமிழருவி’ நூல் வரிசையில், பண்பாடு, இலக்கியம் தொடர்பான விவரங்கள் இன்னும் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மகாகவி பாரதியாரின் பாடல், தமிழ் வளர்த்த அரசர்கள், தமிழ் மன்னர்களின் போர் நெறிமுறைகள், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்ற கலைகளின் அழகு, மரபுக் கவிதைகளின் இலக்கணம், – இப்படிப் பலதரப்பட்ட தலைப்புகளைப் பாடநூல்களில் காணமுடிகிறது.

கருத்து: 

பண்பாட்டுக் கூறுகளையும் இலக்கிய நயம் பாராட்டும் பண்பையும் பாடங்களாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் வழி, எதிர்காலத் தமிழ்ச் சமுதாயம், தன் வேர்களை மறந்துவிடாமல் தொடர்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் ஆதரவில் தாய்மொழி நடவடிக்கைகள்:

சிங்கப்பூரின் கல்வி அமைச்சு, தமிழ், சீனம், மலாய் ஆகிய தாய்மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆண்டுதோறும் தாய்மொழி இருவார நிகழ்ச்சிகளை நடத்தப் பள்ளிகளுக்கு நிதி ஆதரவு அளித்து வருகிறது. அதனைக் கொண்டு ஆசிரியர்கள் மானவர்களுக்குப் பண்பாட்டு, மொழிப் பயன்பாட்டு அனுபவங்களை உருவாக்க வகை செய்கின்றனர்.

சில எடுத்துக்காட்டுகள்:
1. இசை வல்லுநர்களைக் கொண்டு, பள்ளிகளில் மிருதங்கம், குழல், பறை, வீணை முதலிய தமிழ் இசைக் கருவிகள் வாசித்துக் காட்டுதல், அல்லது கற்பித்தல். இசைக்கருவியின் அடிப்படையை அறிந்து கொள்ளும் மாணவ மாணவியர் பின்னர் ஆர்வமிருப்பின் தொடர்ந்து இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வர். கலைகள் கற்கும்போது உடன் பண்பாடும் மொழியும் இயல்பாகப் பிள்ளைகள் மனத்தில் பதிவதுண்டு. எடுத்துக்காட்டாக, பறையிசையின் அடிப்படைத் தாளமுறையைக் கற்பிக்கும் நடவடிக்கையில் பறையின் பாரம்பரியம், அதன் பழங்காலப் பயன்பாடு முதலியவை விளக்கப்படும். மாணவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டு தொடர்ந்து அது குறித்த தங்கள் கருத்துகளை வகுப்பில் பகிர்ந்துகொள்வர். இதன் வழி, மாணவர்கள் தமிழில் குறிப்பு எழுதும் திறனையும் தமிழ்ப் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொள்வர்.

  1. இலக்கிய மாந்தர் பற்றிய ஆராய்ச்சி செய்து, தாங்கள் அறிந்தவற்றை வகுப்பில் பகிர்ந்துகொள்ளும் பணி வழங்கப்படலாம். தற்போது அத்தனை மாணவர்களிடமும் கையடக்கக் கணினி இருப்பதால் எளிதாக இணையத்தில் விவரங்களைத் தேடித் தம் பணிகளைச் செய்யலாம். மாணவர்கள் ஔவையார், பாரி வள்ளல், மகாகவி பாரதியார் போன்றவர்களைப் பற்றிய விவரங்களை இணையத்திலும் நூல்களிலும் தேடி அறிந்து, அவர்களைப் பற்றிய படைப்புகளை உருவாக்கி, வகுப்பின் பொதுத் தளத்தில் பதிவேற்றம் செய்து, மற்ற மாணவர்களும் காண வகைசெய்யலாம்.

இருவழிப் பேச்சுக் கருத்துப் பரிமாற்றம், கற்றலின் சிறந்த விளைவுகளை உறுதிப்படுத்தும் என்பதால், மாணவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தங்கள் படைப்புகள் குறித்துக் கலந்துரையாடி. அவரவர் தேர்ந்தெடுத்த இலக்கிய மாந்தர் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று கேட்டறியலாம். எடுத்துக்காட்டுக்கு, சிலப்பதிகாரக் கதையைப் படித்தறிந்தபின், கண்ணகியின் செயல், அதன் விளைவு, இப்போது கண்ணகி நம்மிடையே இருந்தால், அல்லது நான் அவள் நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடியது போன்ற சிந்தனைகளுக்கு விடையளிக்கலாம்.

  1. எளிய, நடைமுறைக்கு ஏற்ற கைவினைக் கலைகளைக் கற்பதிலும் பங்கேற்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பூமாலை கட்டுதல், பொங்கல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அக்கறையுள்ள பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்து இது போன்ற சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுமுண்டு.

 

  1. திருக்குறள், சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துப் பல இலக்கிய வரிகளை ஆராய்ந்து, அவற்றின் பொருளை உணர்ந்து, அவை தங்கள் மனத்தில் தூண்டும் சிந்தனையைகள், அவை எவ்வாறு வாழ்வில் பயன்படும் என ஆராயலாம். தாங்கள் அறிந்தவற்றை ஒரு படைப்பாக வகுப்பில் பகிர்ந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு திருவாசகப் பாடல் பகுதியை எடுத்து, அதிலுள்ள அறிவியல் நுட்பத்தை ஆராயலாம். ( குறிப்பு: ஜூரோங் மற்றும் தஞ்சோங் காத்தோங் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் இந்தக் குறிப்பிட்ட இலக்கிய வரிகளை மாணவர்கள் ஆராய்ந்து வகுப்புகளில் படைத்தனர்).

 அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம்  அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

 

  • இந்தத் திருவாசகப் பாடல் வரி, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அண்ட வெளி பற்றி அறிந்து வைத்துள்ளனர் எனக் காட்டுகிறது.
  • தமிழர்களின் அறிவியல் ஞானம் மிக உயர்ந்தது.
  • இன்னும் என்னென்ன உண்மைகளை அவர்கள் எடுத்துரைக்கின்றனர் என்பதை அறிய தமிழ் இலக்கியங்களை இன்னும் அதிகமாகப் படிக்க விரும்புவதாகப் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் கருத்துரைத்தனர்.

 

தமிழ் மொழி நிலையம்

  • உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்க் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு மட்டுமின்றி அங்குப் பயிலாத மாணவர்களுக்கும் உதவும் வண்ணம் அங்குப் பல தமிழ்க் கலைகள் கட்டணமின்றிக் கற்பிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பண்பாட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ்விழாக்களில் கலந்துகொண்டு கபடி, உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடியும் கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள் கண்டு ரசித்தும் ஆடிப்பார்த்தும் தமிழ்ப் பண்பாட்டினைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இலக்கியமும் பண்பாடும்

தமிழ் மொழியில் மிகப் பெரும் அறிவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன, தமிழறிஞர்கள் கூறிச் சென்ற உண்மைகள், இலக்கியத்தின் வழி அறியப்படலாம், எனும் கருத்துகள் மாணவர் மனத்தில் பதிவதே இங்கு விரும்பத்தக்க விளைவாகும்.

தமிழரின் பாரம்பரியம் பெருமை மிகுந்தது என்பதை அறிந்தால்தான் அவர்கள் தமிழ் மொழியை மதிப்பார்கள், விரும்புவார்கள்.

பண்பாடு தொடர்பான பாடங்களிலும் நடவடிக்கைகளிலும் கலந்துகொண்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது, மாணவர்கள் பெரும்பாலோர், தமிழ்க் கலை ஒன்றைக் கற்றது பயனுள்ளதாக இருந்தது என்று கூறியுள்ளனர். பண்பாடு தொடர்பான நடவடிக்கைகள், தமிழ் மொழி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நடைமுறையில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அதிகமான வாய்ப்புகளை இவை தருகின்றன.

 

முடிவுரை:

கலைகளும் இலக்கியமும் தமிழர் வாழ்வில் நிரந்தர இடம்பெறுபவை. அடுத்தடுத்த தலைமுறை அவற்றை அறிந்தாலொழிய நம் மொழியின் அடையாளம் தொடர்வது அரிது. இந்த உண்மையை இளையர்க்கு எடுத்துரைத்து, அவர்களைப் பண்பாட்டுக் கூறுகளின்பால் ஆர்வத்தைக் காட்ட ஊக்குவிப்பது அவசியம். பண்பாட்டில் உள்ள ஈடுபாடுதான் மொழி கற்க ஊக்கம் தரும் தூண்டுகோலாகும்.

 

முற்றும்

 

 

Summary:

The essay “Tamil Culture for Tamil Language Learning” by Dr. S Meenatchi explores the relationship between cultural awareness and Tamil language education, especially among students in multicultural societies like Singapore. The author highlights that modern Tamil students face challenges in learning their Mother tongue due to lifestyle changes and increased exposure to foreign cultures. Unlike previous generations, many young Tamils today grow up with English media, limiting their connection to Tamil traditions and language use.

Integrating cultural elements into language education may help address this issue. Singapore’s Tamil curriculum includes literature and cultural elements, to instill a sense of identity. Textbooks feature historical Tamil trade practices, classical poetry, and the contributions of literary figures like Bharathiyar. Government initiatives further support this through cultural activities, traditional music lessons, and research projects on Tamil heritage.

Practical learning approaches, such as hands-on craft sessions, folk performances, and literature discussions, make language learning engaging. These activities encourage students to appreciate Tamil culture and enhance their language skills. In conclusion, it is emphasized that cultural engagement is key to sustaining interest in the learning of Tamil language across generations.

Dr S Meenatchi.