Essays for TTF 2026

 

  1. கட்டுரை: தனித்தமிழ்ச் செம்மல் (குறைந்தது 250 சொற்கள்)

வயது: 41

 

தாய்மொழி காக்குதல் – தலைமுறை கடமை தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கும், தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் இதுவோர் அன்பான வேண்டுகோள். தமிழர்களாகிய நாம், தமிழர்களாகவே வாழ வேண்டும். மொழி என்பது தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம், வரலாறு, பண்பாடு, மரபு ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் ஆணிவேராகும். மணம்வீசும் தென்றலில் குளிர் இல்லையா? தோப்பினில் நிழல் இல்லையா? நம் மொழியில் இலக்கியமும் இலக்கணமும் செல்வமாக இல்லையா? “தமிழ் சோறு போடுமா?” என்ற கேள்வி எழும்போது, நாம் நம் வேரையே சந்தேகிக்கிறோம். வேரை மறந்த மரம் நிலைப்பதில்லை. அதுபோல தாய்மொழியை மறக்கும் இனம் நீடிக்க முடியாது. வரலாற்றில் தாழ்ந்து, வீழ்ந்து, ஒழிந்துகொண்டிருந்த இனங்கள் அனைத்தும், தங்கள் வரலாற்றை அறிந்தபின்பே எழுச்சி பெற்றுள்ளன. நம் மொழியின் வரலாற்றை அறிதல், நம் அடையாளத்தை உணர்வதற்கான முதல் படியாகும். உலகில் மிகச் சில மொழிகளுக்கே கிடைத்த செம்மொழி சிறப்பைப் பெற்ற பெருமை தமிழ் மொழிக்கே உரியது. தமிழ் மண்ணில் பொற்காலம் மலரச் செய்ய சங்கம் அமைத்து மொழியை வளர்த்தனர் நம் முன்னோர்கள். இன்று தமிழர்கள் கண்டம் கடந்துள்ளனர். கழனி பூண்ட தமிழன், இப்போது கணினியில் தமிழை ஆள்கிறான். வேற்று கோள்களுக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களிலும் தமிழைப் பதிவு செய்கிறார்கள். இத்தகைய பெருமை கொண்ட மொழியை நாம் காத்திடாவிட்டால், எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம் அதுவே. கல் தோன்றா மண் தோன்றா மூத்த மொழி தமிழ். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழின் ஆழத்தையும் செழுமையையும் உலகுக்கு உணர்த்துகின்றன. இத்தகைய மொழியின் பண்பாட்டையும் மரபையும் காத்தல் ஒவ்வொரு தமிழரின் தலைமுறை கடமையாகும். தமிழைக் கற்போம்; தமிழில் சிந்திப்போம்; தமிழாக வாழ்வோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

 

==========================================

  1. கட்டுரை: சங்க்கத் தமிழ்ச் செம்மல் (குறைந்தது 250 சொற்கள்)

வயது: 41

 

தமிழர் வாழ்வின் அடையாளங்களுள் முதன்மையானது விருந்தோம்பல் ஆகும். நிலம், மொழி, மரபு என எத்தகைய செல்வங்கள் இருந்தாலும், விருந்தினரைப் போற்றும் பண்பு இல்லையேல் வாழ்க்கை சிறக்காது என்பதே சங்கத் தமிழரின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. இல்லம் தேடி வரும் விருந்தினர், கடவுளைப் போன்றவர் எனக் கருதி, அவர்களை மகிழ்விப்பதே இல்லறத்தின் சிறப்பெனப் பாடினர். “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தென வேண்டற்பாற் றன்று” எனும் சங்கச் சொல்லாடல், தாம் உண்ணும் உணவை விருந்தினருடன் பகிராது தனியே உண்ணுதல் தமிழர்க்கு ஏற்றதல்ல என்பதைத் தெளிவுறக் காட்டுகிறது. இல்லத்தில் உணவு குறைந்திருந்தாலும், விருந்தினருக்குத் தந்து மகிழ்வதே உயர்ந்த பண்பாகக் கருதப்பட்டது. சங்க காலத்தில் விருந்தோம்பல் என்பது உணவு அளிப்பதோடு மட்டுமல்ல; முகமலர்ச்சியோடு வரவேற்பதும், இனிய சொற்களால் உபசரிப்பதும், மனமார்ந்த அன்பை வெளிப்படுத்துவதுமாக இருந்தது. விருந்தினர் யார், எங்கிருந்து வந்தவர் என்ற கேள்விகள் எழாமல், வந்தவரே விருந்தென்பதே தமிழர் மரபு. அந்நியனாக வந்தவனும் அன்போடு ஏற்றுக்கொள்ளப்பட்டான்; பகைவராக இருந்தாலும் விருந்தினராக வந்தால் போற்றப்பட்டான். இல்லற வாழ்வின் அறம் விருந்தோம்பலால் நிறைவடைகிறது என சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். இல்லம் என்பது தனக்கான இடமல்ல; பிறருக்கும் திறந்த வெளி என்பதே சங்கத் தமிழரின் வாழ்வியல் கோட்பாடாக இருந்தது. விருந்தோம்பல் இல்லாத இல்லம் உயிரற்ற இல்லமாகக் கருதப்பட்டது. இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மாறினாலும், தமிழரின் விருந்தோம்பல் பண்பு மாறவில்லை. அது தலைமுறைகள் கடந்து வரும் அறமாகும். அன்பையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் இந்த உயர்ந்த இயல்பே தமிழரை உலகிற்கு அடையாளம் காட்டும் ஒளிமிகு பண்பாகும். விருந்தோம்பல் – தமிழர் உயிர்ப்பின் அடையாளம். அறமும் அன்பும் சேர்ந்த சங்கத் தமிழர் இயல்பு.

===========================================

  1. கட்டுரை : தமிழ்ச் செம்மல். (குறைந்தது 200 சொற்கள்)

வயது: 20

 

தன்னம்பிக்கை – இளமையின் தூண் இளமை என்பது கனவுகளாலும் முயற்சிகளாலும் நிறைந்த காலமாகும். அந்தக் கனவுகளை நனவாக்க உதவும் முக்கியமான பண்பு தன்னம்பிக்கையே. தன்னம்பிக்கை இல்லாமல் அறிவும் திறமையும் இருந்தாலும், வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். எனவே தன்னம்பிக்கை இளமையின் தூணாக விளங்குகிறது. தன்னம்பிக்கை என்பது “நாம் செய்ய முடியும்” என்ற உறுதியான எண்ணம். இந்த எண்ணம் இளைஞர்களை சவால்களை எதிர்கொள்ளத் துணிவூட்டுகிறது. தோல்வி வந்தாலும், அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சிக்கத் தன்னம்பிக்கை வழி செய்கிறது. இன்று தோல்வி அடைந்தவன் நாளை வெற்றியாளனாக மாறுவதற்கு தன்னம்பிக்கையே அடிப்படை. இளமையில் பல குழப்பங்களும் பயங்களும் ஏற்படலாம். தேர்வு, தொழில், எதிர்காலம் போன்ற விஷயங்கள் மனதைச் சோர்வடையச் செய்யும். இத்தகைய சூழ்நிலையில் தன்னம்பிக்கை இருந்தால், சரியான முடிவுகளை எடுக்க முடியும். தன்னை நம்பும் இளைஞன், பிறரின் விமர்சனங்களால் சோர்வடையாமல் தனது இலக்கை நோக்கி முன்னேறுவான். வரலாறும் சமகாலமும் இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன. இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு, தன்னம்பிக்கையால் மக்கள் நம்பிக்கையை பெற்ற நரேந்திர மோடி, தேநீர் விற்ற நிலையிலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தார். அதேபோல், இளமைக்காலத்திலேயே அறிவியல் கனவுகளை வளர்த்த அப்துல் கலாம், தன்னம்பிக்கையால் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். மேலும், தன்னம்பிக்கை சமூகத்தில் தலைமைப் பண்புகளை வளர்க்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இளைஞர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகவே, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகும். தன்னம்பிக்கையே இளமையை வலிமையாக்கும் உண்மையான தூண்.

====================================

  1. கட்டுரை தனித்தமிழ்ச் செம்மல் (குறைந்தது 250 சொற்கள்)

வயது: 40

ஆக்கம் : அ.பன்னீர்ச் செல்வம் (Dip.Edu,B.Sc,M.S.Ed) நாடு : பினாங்கு, மலேசியா தலைப்பு : மொழி இனத்தின் உயிர் உலகில் மாந்தன் அறிவு வளர வளரப் புதுப்புதுக் கலைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மொழியும் ஒன்று. ஆதிமக்கள் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு அறிவித்தற்குப் பெரிதும் முயன்றனர். இம் முயற்சியினாலேயே மொழி உண்டாயிற்று. மொழி என்பது இறைவனால் படைக்கப்பட்டதன்று; இயற்கையாய் உள்ளதுமன்று; மாறாக அது மாந்தனால் ஆக்கப்பெற்றுதே என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள். அப்படி ஆக்கப்பெற்றது ஒருவனால் மட்டுமன்று; கழிபலவூழிகளாகக் கணக்கற்ற தலைமுறையாளரால் சிறிது சிறிதாய் ஆக்கப் பெற்றதாகும். பல்வேறு நிலைகளில் திரிபு, சுருக்கம், பெருக்கம், கூட்டு, கலப்பு என்னும் ஐம்முறைகளால் பலமொழிகளாக உலகமெங்கும் பரயிருக்கின்றன. இவ்வாறு நீண்டநெடிய வளர்ச்சி வழிகளையும் வரலாற்று வலிகளையும் சுமந்து நிற்கும் மொழியானது ஓர் இனத்தின் உயிராகக் கருதப்படுகின்றது. மேலும், உலகமொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக விளங்கும் தமிழ்மொழி என்பது உயிருக்கும் மேலாக தமிழரிடையே காலந்தோறும் போற்றப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. எவ்வாறு மாந்தனின் முகம் சிதைந்தால் அவனின் உருவம் சிதையுமோ அவ்வாறே ஓர் இனத்தின் மொழி சிதைந்தால் அவ்வினமே சிதைந்து காணாமல் போவதோடு காலவோட்டத்தில் மாற்றானுக்கு அடிமையாய் வாழ நேரிடும் என்பது உலக வரலாறு. எனவேதான், நாடா அல்லது மொழியா என்ற தேர்வு எழுந்தபோது எங்களுக்கு மொழிதான் முதன்மை என முழங்கினர் அயர்லாந்து நாட்டுத் தலைவர்கள். நாடோடிகளாகப் பரவியிருந்தவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாத்து வைத்திருந்தமையால் தங்களுக்கென ஒரு நாட்டை அடைந்தனர் யாதவர்கள். இப்படி மொழியை உயிரெனக் கட்டிக்காத்தால் உலகில் பெருமைமிக்க வாழ்வை வாழலாம் என்பது திண்ணம். எனவேதான், உலகில் உள்ள அனைத்துநாடுகளும் தங்களின் மொழிக்கு முன்னுரிமை வழங்கி மொழிவழி தேயங்களை அமைத்துள்ளனர். கடந்த 50000 ஆண்டுகளுக்கு முன்னமே செப்பமுற்று, 25000 ஆண்டுகளுக்கு முன் செய்யுளும் பாட்டும் தோன்றி, 12000 ஆண்டுகளுக்கு முன் சங்கம் நிறுவி தமிழாய்ந்த தமிழனத்தில் தமிழ்மொழி என்பது உயிருக்கும் இறமைக்கும் நிகராகச் சான்றோர்களாலும் இயல்பான தமிழ்மக்களாலும் போற்றப்படுவது எக்காலத்திலும் காணவல்லது. தமிழ்மொழியைச் செந்தமிழ் அதாவது செம்மொழி என்று அன்றே தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் பாடியுள்ளார் பனம்பாரனார். அருந்தமிழ் ஆற்றலை இகழ்ந்ததால் மூவேந்தர் கொடியையும் ஒருசேர ஏந்திக்கொண்டு வடக்கே போருக்குச் சென்றார் சேரன் செங்குட்டுவன். தமிழ்பாடும் புலவர்களுக்குப் பெருமதிப்பு வழங்கி தங்களுக்கு மேலாக வைத்து அழகுபார்த்தனர் தமிழ் மன்னர்கள். இறைமையை உணர்ந்த, சமயமதங்களைக் கடந்த, இயற்கையை நேரிதின் உணர்ந்த அருளாளர் பலர் தமிழை என்றும் போற்றி உயர்வாகப் பாடியுள்ளனர். “பல்லுயிரும் பலவுலகும்” என்னும் பாடலின்வழி தமிழைப் பரம்பொருளுக்கு ஒப்பாகப் பாடிய பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனாரின் எண்ணம்தான் தமிழர்களின் உள்ளக்கிடங்கே. எளிதில் பேசவும், எளிதில் பாடவும் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தொல்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று வள்ளலார் அருள்கிறார். தமிழ்மொழி பெருவள மொழி என்பதால் இதற்குச் சொற்கடன் தேவையில்லை. இது மற்றமொழிகளுக்குக் கடன்கொடுக்குமே தவிர கடன்பெற்று வளர தேவையில்லை. இலக்கண வரம்புகள் இம்மொழியில் சீர்மையாக இருப்பதால் எக்காலத்திலும் எக்கோணத்திலும் புதிய புதிய சொற்களையும் துறைசார்ந்த கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்கள் வாயிலாகக் பண்பாட்டுக் கூறுகள் எக்காலத்திற்கும் பயன்தரும். அவை இனத்தை வழிநடத்தும். தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்றும், திருக்குறளில் ‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்பாட்டைப் பின்பற்றி வாழ்பவர்களை ஒழுக்கமுடையவர் என்றும், சான்றோர் என்று புகழ்ந்தனர். விருந்தோம்பல், உணவுமுறை, உடை, விளையாட்டு, பேச்சு, குமுகாயச் சமன்நிலை, நன்றி மறவாமை, குடும்ப ஒற்றுமை, அரசியல் போன்ற பல பண்பாட்டு விழுமியங்களை இலக்கியம் எடுத்து இயம்புகின்றது. எனவே, மொழிவழியாகவே தமிழ் இனத்தின் வாழ்வியல் கூறுகளைக் கண்டு ஒழுக முடியும். தமிழ்மொழி அறியாத அல்லது தமிழ்மொழி பக்கமே தலையைக் காட்டாத தமிழர் எவ்வாறு எந்தக் காலத்தில் அவற்றையெல்லாம் படித்து அறிந்துகொள்ள முடியும்? தமிழ்மொழி தெரிந்தால்தான் இனத்தின் மரபு புரியும் அதன்வழி வாழ முடியும். தம் மொழியை உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கின்றன. தமிழ்மொழியை உயிராகக் கருதும் தமிழர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தூய்மையான தமிழ்மொழியைப் பேணுவதும்; மெய்யான மூலப்பெருந்தமிழ் மரபைப் பின்பற்றுவதும் ஒட்டியே அமையும். “தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் இன்பத் தமிழ்க்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்” என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் உள்ளத்துணர்வு உலகத் தமிழர்களிடையே என்றும் உறுதியாக இருத்தல் வேண்டும்.

================================================

  1. கட்டுரை: தமிழ்ச் செம்மல். (குறைந்தது 200 சொற்கள்)

வயது: 45

 

கடின உழைப்பு வெற்றியின் சாவி மனிதனின் அறியாமையை விலக்குவது கல்வி. கற்ற கல்வியை நடைமுறையில் செயல்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்பே நம் கனவுகளை நனவாக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி வெறும் கனவுதான். நமக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல லட்சியம் இருக்க வேண்டும் அந்த லட்சியப் பாதையில் வரும் தடைகளைத் தகர்த்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கை அடைவது தான் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர அதை அடைய நடந்து செல்கிறோமா, ஓடுகிறோமோ அல்லது பறந்து செல்கிறோமா என்பது முக்கியமல்ல. ஆபத்துக்கள் இல்லாத வாழ்க்கைப் பயணம் கிடையாது. கப்பல் கம்பீரமாக கரையில் நிற்பதற்காக கோடி கணக்கில் செலவு செய்து கட்டி முடிக்கப்படவில்லை. கடலில் இருக்கும் அனைத்து ஆபத்துக்களையும் தாண்டி கரை சேரவே வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானமும் அப்படித்தான் சவால்களை சந்தித்து போராடி வெல்லவே இந்த மானுடப் பிறவி என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடினமாக உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சைப் பெரிய கோயில் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை. வரி வரியாகத்தான் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அடி அடியாகத்தான் கவிதைகள் பிறக்கின்றன. மந்திரத்தால் மாங்காய் விழுகிற மாதிரி காப்பியங்கள் பிறந்துவிட முடியாது.” உலகெல்லாம் “என்ற ஒற்றை வரியில் தான் பெரிய புராணம் தொடங்குகிறது. ஆரம்பம் எல்லாம் சிறிது தான். ஆனால் அதன் பலன் மிகப்பெரியது . எல்லா உயிரினங்களும் உழைக்கின்றன. தேனீக்கள் 16 மைல் தூரம் பறந்து சென்று தான் தேனை சேகரிக்கிறது. எறும்புகள் சுறுசுறுப்புடன் தன் வாழ்நாள் முழுமைக்கும் ஆன உணவை சேமிக்கிறது. சிலந்தி எத்தனை முறை அதாலும் தனது வலையை தானே பின்னிக் கொள்கிறது. மாடுகள் கூட வயலில் இறங்கி உழைப்பதால் தான் மாட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம். நமக்குள் இருக்கும் திறமையை முழுமையாக மதிப்பீடு செய்யும் தகுதி நமக்கு மட்டுமே உள்ளது. எப்பொழுதுமே அடுத்தவர் கையை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது. சிறிய பட்டாம்பூச்சி கூட தன் சொந்த முயற்சியில்தான் கூட்டில் இருந்து வெளியே வரும்பொழுதுதான் அதனால் சிறகடித்து பறக்க முடியும். நம்பிக்கையை இழக்கக்கூடாது. எந்த ஒரு தொழிலும் கேவலமானது அல்ல . அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பது தான் கேவலமானது. படிப்போ, விளையாட்டோ, தொழிலோ எதுவாக இருந்தாலும் கடின உழைப்பே அதன் வெற்றியின் ரகசியம். உழைப்பாளிகளுக்கே சிலை வைக்கப்படுகிறது. விதியை மாற்றி எழுதும் வல்லமை கடின உழைப்பிற்கே உண்டு. உழைப்பால் உயர்வோம்.

================================

  1. கட்டுரை: தனித்தமிழ்ச் செம்மல் (குறைந்தது 250 சொற்கள்)

வயது: 16

தொழில்நுட்பம் நண்பனா? பகைவனா? மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்நுட்பம் இன்றி அமையாததாக மாறி உள்ளது. மனிதன் உயிர் வாழ காற்றும் வெளிச்சமும் மட்டுமல்லாது தொழில் நுட்பமும் அவசியம் என்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் தொழில்நுட்பம் மனிதனின் மிக நெருங்கிய நண்பனாக விளங்குகிறது. இணையம், கணினி, கைபேசி போன்றவை உலகை உள்ளங்கையில் சுருக்கி உள்ளது. இணையத்தின் வழியாக மாணவர்கள் எளிதில் கல்வி கற்றுக் கொள்ள முடிகிறது. புத்தகம் மூட்டைகளை சுமந்து சென்ற காலம் போய். ஸ்மார்ட் ஆக ஒரு லேப்டாப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.மருத்துவத் துறையில் நவீன கருவிகள் பல உயிர்களை காப்பாற்றி வருகின்றன. கையில் பணம் காசு எடுத்துச் சென்ற நாம் இன்று அட்டைகளை மட்டுமே எடுத்துச் செல்கிறோம். செயற்கை நுண்ணறிவால் சோதிக்கப்பட்டு பணம் செலுத்தும் முறையும் வந்துவிட்டது. தகவல் பரிமாற்றம் சில வினாடிகளில் நடைபெறுவதால் அனைத்தும் எளிதாகி விட்டது. கொரோனா காலகட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் உதவிகள் அளப்பரியது. மற்றொருபுறம் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு அதை பகைவனாகவும் காட்டுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே. இதற்கு தொழில் நுட்பமும் விதிவிலக்கு அல்ல. அதிகமாக கைபேசியை பயன்படுத்துபவர்கள் மனித உறவுகளை இழக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது இல்லை. தவழும் குழந்தைகள் கூட மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பது தான் இதன் உச்சகட்டம். ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள் ஓரமாக உட்கார்ந்து கைபேசியில் மற்றவர்கள் ஓடுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இயந்திர மனிதர்கள் அதிகமாக இயங்குவதால் வேலை வாய்ப்புகள் குறைகின்றன. ஒருவரைப் பற்றிய வதந்தியை பரப்புவதில் இந்த தொழில்நுட்பங்கள் முதல் இடத்தை பிடிக்கின்றன. எனவே எது சரி எது தவறு என்ற முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கூட நம்பிக்கை இன்மையை ஏற்பட செய்து விடுகிறது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி. எனவே தனிப்பட்ட முறையில் தொழில்நுட்பம் ஒருவனுக்கு நண்பனும் அல்ல பகைவனும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அளவோடு பயன்படுத்தினால் நண்பன். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பகைவன். இறுதியாக தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி மட்டுமே. அந்தக் கருவியை நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ள விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது இன்றைய காலத்தில் அவசியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்தினால் அது நமக்கு நண்பன் நாம் அதற்கு அடிமையானால் அது நமக்கு பகைவன்.

====================================

7. தாய்மொழிக் காத்தல் – தலைமுறை கடமை!

வயது: 50

முன்னுரை

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பெற்ற தாய், தான் பிறந்த நாடு மற்றும் அவனது தாய்மொழி மூன்றுடனும் நெருங்கிய உறவுண்டு.

தாயுடையது, தொப்புள்கொடி உறவு.நாடுடையது  அம்மண்ணில் பிறந்ததால், வளர்ந்ததால் உருவான உறவு. தாய்மொழியினுடைய உறவு, நாம் கருவாக இருந்த தருணத்தில் நம் தாயார் நம்மோடு பேசியபோது தோன்றியது.

நமது தாய்மோழியே நமது அடையாளம். ஏனெனில், மொழி வழி தான் நாம் நம் பண்பாட்டை அறிகிறோம்; பின்பற்றுகிறோம்.  மொழியால் தான் நமது பண்பாட்டிலுள்ள விழுமியங்கள், பழக்கவழக்கங்கள் இலக்கியம், இசை, உணவு ,உடை, நடனம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இயலும்.  நம் தாய்மொழியைக் காப்பது நம் அடையாளத்தைக் காப்பதற்குச் சமமாகும்.

தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என்று மூன்றாய் பகுத்துள்ளனர்.  இயல் என்பது இயம்புவது.  அகத்தியம் முதல் இன்றைய திரைப்பட வசனங்கள் வரை இலக்கியம் மக்களுக்குப் பலனும் வளமும் வழங்குகிறது.

இனம்,மொழி,மதம் பொன்ற வேறுபாடுகளைக் கடந்த வள்ளுவம் இன்றும் பேசும் பொருளாகவும், ஆய்வு பொருளாகவும் உள்ளது.

பாடல்கள் மற்றும் இசைக் கருவிகள் வழி செவிக்கு விருந்தளிக்கிறது இசை.  எதுகையும் மோனையும் சந்தமும் நிறைந்த சங்க காலப் பாடல்களை வாசிப்பவரும் பாடுபவரும் கனிச்சுவை அறிவர்.

நாடகம், இயலையும் இசையையும் கலந்து கதைவழி பல தகவல்களைச் சொல்லித் தருகிறது.  ஆன்மீகக் கதைகளாகத் துவங்கி பின் நவீன சமுதாய சவால்கள், சிக்கல்கள், சீர்குலைவுகள் போன்றவற்றைச் சுட்டிக் காட்டும் கருவியாக உருமாறியது.  தற்போது திரைப்படங்களும் ஊடகங்கங்களும் அவ்வாறுள்ளன.

தமிழரின் பொங்கல், புத்தாண்டு, தைப்பூசம் போன்ற விழாக்கள் நம் பண்பாட்டின் சிறப்புகளைக் புலப்படுத்துகின்றன்.

வாழையிலையில் பரிமாறப்பட்ட சோறு, கதரிக்காய் பொறியல், அவரைக்காய் அவியல் , கிழங்கு பிரட்டல், சாம்பார், ரசம், மோர் மற்றும் பாயாசம் ஆகிய சைவ உணவினைக் கரங்களால் உண்பவர் எந்த விரைவு உணவை அவற்றிக்கு ஈடிணையெனக் கூறுவர்?

மேற்குறித்த சிறப்புகளைக் கொண்டுள்ள நம் தாய்மொழியைக் காத்தல் நம் தலைமுறையின் கடமையாகும்.

இன்று தமிழர்கள் புலம் பெயர்ந்து, பல நாடுகளில் வாழ்ந்தும் வசித்தும் வருகின்றனர்; வெவ்வேறு துறைகளிலும் ஒளிர்கின்றனர்.  அவ்வாறிருக்கையில் நம் தாய்மொழியைக் கட்டிக்காப்பது நமது கடமையாகும்.

முடிவுரை

இப்புவியில் தோன்றிய எத்தனையோ மொழிகள் கால வெள்ளத்தில் மூழ்கி மறைந்துள்ளன.  அவ்வாறு மறைந்ததற்கு பல காரணங்களில் ஒன்று:  சில மொழிகளைச் சார்ந்தவர்கள் தம் தாய்மொழியைக் காத்திடப் போதிய முயற்சி புரியாததேயாகும்.  அந்நிலைமை தமிழ்மொழிக்கு வராதிருக்க செம்மொழியான நம் தாய்மொழியைக் காத்தல் நம் தலைமுறையின் தலையாயக் கடமையாகும்.

நிறைவு

======================================

8. குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் அவசியமா?
வயது: 50
—-
தமிழர்கள் தமிழில் ஏன் பெயர் வைக்கவேண்டும்? இந்த கேள்வியே சற்று அபத்தமாக தோன்றலாம். ஆனால், இன்றைய சூழல், இந்த கேள்வி அவசியமானது என்பதை உணர்த்துகிறது. ஒரு பக்கம் பெயரில் என்ன இருக்கிறது என்று யோசித்தாலும், இன்னொரு பக்கம் பெயர் என்பது நம் அடையாளம் இல்லையா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று,  உலகில் வாழும் செம்மொழிகளில் ஒன்று, சங்கம் வைத்து வளர்த்த மொழி, இயல்-இசை-நாடகம் என மூன்றிலும் வளர்ந்த மொழி என மிகப்பெரிய வரலாறு இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு.
இப்படி நாம் பெருமைப்பட வேண்டிய சூழலில், இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்று யோசித்துப்பார்த்தால் வேதனையாக தான் இருக்கிறது. தமிழின் சுவை அறியாமல் பிற மொழிகள் மீதான மோகம் இன்னமும் தமிழர்களை விடவில்லை.
குறிப்பாக ஆங்கில மோகமும், வடமொழி மோகமும் இன்னமும் குறையவில்லை. “ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது மொழி மட்டும் தான்”, “இந்தி தெரியாததால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை” என்பதையும் திரும்ப திரும்ப சொல்லும் அளவுக்கு இங்கே தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கத்திற்கு வருவோம். குழந்தை பிறக்க போகும்  சமயத்தில் அல்லது பிறந்தவுடன் உங்கள் நண்பர்களிடம் இருந்து “ஏதாவது நல்ல பெயரா சொல்லுங்களேன்?” என்ற கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கலாம். நீங்கள் உடனே அவசரப்பட்டு பெயர்களை சொல்லிவிட முடியாது. நீங்கள் அடுத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் என்று கேட்கவேண்டும். ஏனென்றால், ஜோசியக்காரர், “இந்தெந்த  எழுத்தில் வைத்தால் குழந்தை டாப்பாக வரும்!” என்று சொல்லி இருப்பார். அதனால், அந்த எழுத்தில் தான் நீங்களும் சொல்லவேண்டும். சிலர், ஷ,ஸ்ரீ,ஹ  என்று ஆரம்பிக்கிற மாதிரி தமிழ் பெயர் சொல்லுங்க என்று கேட்டு இருக்கிறார்கள். இவை வடமொழி எழுத்துக்கள் என்ற புரிதல் கூட இங்கே பலருக்கு இருப்பது இல்லை. வடமொழி எழுத்துக்களை பெயரில் வைப்பதும், வடமொழி பெயர்களை வைப்பதும் பரவலாக தமிழ்நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு ஜோசியம், நியூமராலஜி, நேமலாஜி போன்ற நம்பிக்கைகள் துணைப் போகிறது.
ஷ, ஸ்ரீ, ஹ மட்டுமல்ல, தமிழில் வடமொழி கலப்பு என்பது இன்னும் அதிகம். என் பெயர் “ராஜராஜன்” என்பது கூட தமிழ் கிடையாது. ராஜராஜ சோழன் தமிழ் மன்னன் என்பதால் அதை தமிழ்ப்பெயர் என்று நாம் எண்ணுவது இயல்பு. ஆனால், இதுவும் வடமொழி கலந்த பெயர் தான். ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன். இப்படி, நம்மை அறியாமலே நாம் தமிழ்ப்பெயர்களை விட்டு விலகி இருக்கிறோம்.
கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள் மூலம் தமிழ்ப்பெயர்கள் மீதான கவனம் அதிகரித்தது என்று சொல்லலாம். இந்த இயக்கங்களின் தாக்கத்தால் வீடுகளில் தனித்தமிழ் பெயர்கள் அதிகரித்தது. நம் முந்தைய தலைமுறையில் பல குடும்பங்களில் தேடித்தேடி தமிழ்பெயர்களை வைத்து இருப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு அதில் ஒரு பெருமிதமும், கர்வமும் கூட இருக்கும். இந்த பெயர்களில் கூட இருவகைகளை பார்க்கலாம். மத அடையாளத்துடன் வைக்கப்படும் பெயர்கள், மத அடையாளம் இல்லாமல் வைக்கப்படும் பெயர்கள் என்று. மதங்களை கடந்தும் தமிழை நேசித்து தமிழ் பெயர்களை வைத்தார்கள். இன்பன், இனியன், அறிவழகன், தமிழரசி, தமிழரசன், கயல்விழி, மலர்விழி, சுடர்க்கொடி என கவித்துவத்துடன் தனித்தமிழ் பெயர்கள் போன தலைமுறையில் அதிகமாக இருந்தது.
பெயர்களில் தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கமும் குறிப்பிடத்தகுந்தது. அவர் தனித்தமிழ் என்ற பெயர்களை தாண்டி, பெயரில் இருக்கும் அரசியலை பார்த்தார். பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை நீக்க வேண்டும் என்று போராடி வென்றவர் பெரியார். அவர், இந்த பெயர்களில் இருக்கும் புனிதங்களை கூட உடைத்தார். ரஸ்யா, மாஸ்க்கோ போன்ற பெயர்களை போன தலைமுறையினரிடம் நீங்கள் நிறைய பார்க்கலாம். இது தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் வைக்கப்பட்ட பெயர்கள். தனித்தமிழ் பெயர்கள் என்பதை தாண்டி, பெயரிலேயே புரட்சி வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். இந்த வரிசையில், இன்குலாப், இங்கர்சால், கார்கி, லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களும், இந்திய சுதந்திர போராட்டத்தின் தாக்கத்தினால் காந்தி, நேரு போன்ற பெயர்களும் அதிகரித்தது. முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் பலருக்கு பென்னிகுக் என்ற பெயர் வைக்கப்பட்டதும் வரலாறு.தமிழர்கள் நன்றி உணர்வு மிகுந்தவர்கள் என்பதற்கும், மொழியை வெறும் அழகுணர்ச்சியுடன் மட்டும் பார்க்காமல் அறிவு சார்ந்தும் பார்ப்பவர்கள் என்பதற்கும் மேற்சொன்ன பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள.
வடமொழி மோகம் அதிகரித்துவிட்ட இந்த காலத்திலும் தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது ஆரோக்கியமானது. இன்றும், நல்ல தனித்தமிழ் பெயர்களை வைக்கவேண்டும் என்று தேடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆம்பல், யாழினி, கவின், வெண்பா, நவிரா, ஆதிரை, ஆதிரன் என இனிமையான பெயர்கள் வைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆனால், எண்ணிக்கை அளவில் வடமொழி பெயர்கள் தான் இன்னமும் அதிகமாக இருக்கிறது.
தனித்தமிழ் பெயர்கள் தரும் இனிமைக்கு மாற்றே இல்லை. ஆனாலும், தமிழ்ப் பெயர்களை சொல்லுங்கள் என நண்பர்கள் கேட்கும் போது கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டி இருக்கிறது. பெயர் தமிழாகவும் இருக்கவேண்டும், அதேவேளையில் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனித்தமிழ் பெயர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்படவேண்டியது, முக்கியமானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கு அடுத்த நிலை ஒன்று இருப்பதாக  தோன்றுகிறது. அது என்னவென்றால், நம்மிடையே அறிமுகமான, நாம் படித்த வரலாற்றில் இருந்தும், காப்பியங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்து எடுக்கப்படும் பெயர்கள். இவை தூயத்தமிழ் பெயராக இல்லாவிட்டாலும்.இந்த பெயர்களுக்கு ஒரு தனி வலிமை இருக்கிறது.
சங்கமித்ரா என்ற பெயர் தூயத்தமிழ் இல்லை. ஆனால், அந்த பெயரில் ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல், இந்தப்பெயருக்கும் தமிழின் ஐம்பெரும் காப்பியமான மணிமேகலைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதேப்போல, இன்னொரு பெயர் சொல்லவேண்டுமென்றால்,சித்தார்த்தன் என்ற பெயரை சொல்லலாம். சித்தார்த்தன் என்ற பெயர் வசீகரமானது. அந்த பெயர் ஆழமானதும் கூட. புத்தர் நம் நாட்டின் புரட்சிகர ஆன்மீக தலைவர். அவரின் இயற்பெயர் என்பதாலே இந்த பெயருக்கு ஒரு தனி சிறப்பு.
அர்த்தமே தெரியாத “ஏதோ” ஒரு பெயருக்கு பதில், தனித்தமிழில் பெயர் வைத்து தமிழின் இனிமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். அல்லது,  இம்மாதிரி உலகப்பெயர்களை,காப்பியப் பெயர்களை, இந்தியப் பெயர்களை வைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? என்று ஒதுக்காமல் அதை நம் அடையாளமாகவும், அதில் இருக்கும் அரசியலையும் புரிந்துக்கொள்ளவேண்டும்.